Thursday, April 3, 2008

<>வழிபடுவோர் நிலை<>


சுந்தரர் தேவாரங்களில் அடியார் -
வழிபடுவோர் நிலை

பேராசிரியர்.அருணாசலம் சண்முகதாஸ், Ph.D. (Edinburgh)
Professor Emeritus
(University of Jaffna)
"Kokulam"
Parameswara Lane,
Thirunelvely,Jaffna, Sri Lanka.

1. முன்னுரை:-

<>செம்மொழித்தமிழ்<>

இலக்கியங்களெனச் சங்க இலக்கியங்களை
மட்டும் நாம் கொள்ள முடியாது. தமிழ்ச்
செம்மொழிக்காலம் கம்பனுடைய
சேக்கிழாருடைய காவியங்கள் வரை
நீண்டுள்ளது என்றே கூறவேண்டும்.

தமிழின் பக்திப் பாடல்கள்
கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கும்
9ஆம் நூற்றாண்டுக்கும்
இடையே பெருந்
தொகையாகப் பாடப்
பட்டன.


இப்பாடல்களும்
செம்மொழித்தமிழ்; இலக்கியங்களாக
அமைகின்றன.

இப்பாடல்களைப் பாடியோர் தாம் செம்மொழிப்
பாடல்கள் பாடுவதாகவே குறிப்பிட்டுள்ளனர்.
இதற்குப் பெருந் தொகையான சான்றுகளைத்
தேவாரங்களிலும் திவ்வியப் பிரபந்தப்
பாசுரங்களிலும் காணமுடிகின்றது.
செம்மொழித்தமிழினைப் பண்டைத்
தமிழர் ‘செந்தமிழ்;’ என்று வழங்கினர்.

இச்சொற்றொடர் “செந்தமிழ் நிலத்து
வழக்கொடு சிவணி” (சொல். எச்ச. 23) என்று
தொல்காப்பியத்திலே வழக்குப்பெற்று பக்திப்
பாடல்களில் பெருந்தொகையான இடங்களில்
இடம்பெற்றது.

திருஞானசம்பந்தருடைய பதிகங்களிலேயே
இத்தொடர் பெருந் தொகையாகக்
கையாளப்பட்டுள்ளது.

“ஞானசம்பந்தன் செந்தமிழுரை” (சீர்காழி),

“அருந் தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ்”
(திருக்கழுக்குன்றம்),

“பாமரு செந்தமிழ் பாடல் பத்திவை”
(கற்குடி) என்பன வகைமாதிரிக்காகத் தரப்பட்டுள்ளன.

“செந்தழிழோடு ஆரியனைச் சீரியானை”
(திருவாவடுதுறை) என்று திருநாவுக்கரசரும்,

“ஒலிகொள் இன்னிசை செந்தமிழ் பத்தும்”
என்று சுந்தரரும்,

“சீர்மலி செந்தமிழ் வல்லார்” (4:10)
என்று பெரியாழ்வாரும்,

“கோதை தொகுத்துரைத்த செந்தமிழ் பத்தும்” (9:10)
என்று நாச்சியாரும,;

“செந்தமிழ் பத்தும் வல்லார்” (6:5:11)
என்று நம்மாழ்வாரும் குறிப்பிடுகின்றனர்.

செம்மொழி இலக்கியமாகிய சுந்தரருடைய
பாசுரங்களிலே அடியார் - வழிபடுவோர் பற்றி
என்ன கூறப்பட்டுள்ளது என்பதை
இக்கட்டுரை நோக்கவுள்ளது.


























நாயன்மார்கள், இறைவன்மீது பாசுரங்கள்
பாடியவர்கள் அடியாரெனவும் ஏனையோர்
வழிபடுவோரெனவும் இக்கட்டுரையிலே
கொள்ளப்படுகின்றது.

உலகச் சமயங்கள் எல்லாவற்றிலும்
இறைவன்-அடியவர் என்னும் இருநிலை
உள்ளது. இறைவனுடைய அருளை வேண்டி
நிற்பவர்களாகவே அடியவர் விளங்குவர்.

இவ்வடியாருள் இறைவன்மீது பாசுரங்கள்
பாடியவர்கள் சிலரே. அவர்களுள் திருமுறைப்
பாசுரங்கள் பாடிய நாயன்மார்களும் திவ்வியப்
பிரபந்தப் பாசுரங்கள் பாடிய ஆழ்வார்களும்
அடங்குவர்.

ஆயனும் மந்தையுமாக இறைவன்-அடியார்
தொடர்பினைக் கிறிஸ்தவ சமயம் நோக்குவது
போல சுந்தரரும் இறைவன்-அடியார் தொடர்பினை
“ஆயா உனக்காளாயினி அல்லேலெனலாமே” என்று
குறிப்பிடுவர்.

மேய்ப்பனாக இறைவனைச் சுந்தரர் நோக்குவதை
இங்கு காணமுடிகின்றது. இறைவன்-அடியார்,
அடியார்-அடியார் தொடர்பினை நாயன்மார்கள்
பொதுவாகப் பாடினாலும் சுந்தரர் தேவாரங்களிலே
அது தனித்துவமான முறையிலே இடம்பெறுகின்றது.













2. சுந்தரர் தனித்துவமான அடியார்

இறைவனுடைய அருள்வேண்டி நிற்பவர்
யாவரும் அடியார்களே. ஆனால் அவ்வடியார்களுள்
இறைவன்மீது பாசுரங்கள் பாடியவர்கள் சிலரே.
அவர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக
‘அடியார்’ என்னும் சொல் அவர்களை மட்டும்
குறிக்க, ஏனையோரை ‘வழிபடுவோர்’ என்னும்
சொல்லால் குறிக்கின்றோம்.

அடியார்களுள் சுந்தரர் பாடிய நூறு பதிகங்கள்
நமக்குக் கிடைத்துள்ளன. இப்பதிகங்களைப்
படிக்கும்போது சுந்தரருடைய தனித்துவமான
பல தன்மைகளை அறியக்கூடியதாயுள்ளது.

சுந்தரமூரத்தி சுவாமிகளுடைய நூறு பதிகங்களில்
ஐம்பதுக்கு மேற்பட்டவற்றில் இறைவனிடம்
தன்னை ஓர் அடியவனாக தன்மை
ஒருமையிலே விண்ணப்பிப்பதைக் காணலாம்.

“எங்கேனும் இருந்துன் அடியேன் உனைநினைந்தால்

அங்கேவந் தென்னோடும் உடனாகி நின்றருளி

இங்கேஎன் வினையை அறுத்திட் டெனையாளும்

கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே” (23:2)

இப்பாசுரத்தில் பிற அடியார்களினின்று வேறுபட்ட
ஒருவராக சுந்தரர் தன்னை வெளிப்படுத்துவதைக்
காணமுடிகின்றது. இறைவன் தான் நினைத்த
மாத்திரத்தே தன்னோடு வந்துநிற்பதாகச்
சுந்தரரைத் தவிர வேறு எந்த அடியாரும்
கூறியதாகத் தெரியவில்லை.

“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய

தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி

மாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதியில்லா

ஏழையேன் பிரிந்திருந்தேன் என்ஆரூர் இறைவனையே” (51:10)

என்று தன்னை இறைவனுடைய அடியானாக
மட்டுமன்றித் தோழனாகவும் குறிப்பிடுகிறார்.
இவ்வகையில் ஏனைய சைவ, வைணவ அடியவர்
களுடன் ஒப்பிடுமிடத்து சுந்தரர் ஒரு தனித்துவமான
அடியாராக அமைகின்றார். அடியார்களை மூன்று
வகையாகப் பாகுபாடு செய்கின்றார்:

“பல்லடியார் பணிக்குப் பரிவானைப் பாடிஆடும் பத்தர்க்கன் புடையானை

செல்லடியே நெருக்கித் திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்திமுத்தி செய்வானை


நல்லடியார் மனத்தெய்ப்பினில் வைப்பை நானுறு குறையறிந் தருள்புரிவானை

வல்லடியார் மனத்திச்சை யுளானை வலிவலந்தனில் கண்டுகொண்

டேனே.” (67:2)

பல்லடியார், நல்லடியார், வல்லடியார் என்று
அடியார்களை இனங்காணும் சுந்தரர் தன்னை
வல்லடியார் பிரிவிலே சேர்த்துக்கொண்டிருப்
பாரென எண்ணமுடிகின்றது.

சுந்தரரின் திருவாரூர்ப் பதிகம் (73) அவர்நிலை கூறுவதாகவே அமைகின்றது. மணிவாசகர், அப்பர் போன்றோர் தாம் செய்த பிழைகள் பற்றித் தம் பாசுரங்களிலே குறிப்பிடுகின்றனர். ஆனால் சுந்தரரோ ஒரு சாதாரண அடியவராக இறைவனிடம் தன்னை ஒப்புக்கொடுப்பவராக இப்பதிகத்தினூடாக வெளிப்படுகிறார்.

“நமர்பிறர் என்ப தறியேன் நான்கண்ட தேகண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பன் தக்கவா றொன்றும் இலாதேன்” (73:9)
என்னும் பாசுரப் பகுதி எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றது.
ஓர் இயல்புநிலை அடியார் தன் உள்ளத்திலுள்ளவற்றை
அப்படியே உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்துவதை
இது போன்ற பாடலடிகள் வெளிக்காட்டுகின்றன.

“நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானைத் தொண்டனேன் அறியாமை அறிந்து
கல்லியல் மனத்தைக் கசிவித்துக் கழலடிகாட்டி யென்களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின்றானை வலிவலந்தனில் வந்துகண்டேனே” (67:5)

என்னும் பாடலும் சுந்தரரின் இயல்புநிலைப் பாடலாக
அமைகின்றது. அப்பரும் மணிவாசகரும் தாம் செய்த பிழைகளைப் பாடல்களிலே மிகுந்த அடக்கத்துடன் கூறுவர். ஆனால் சுந்தரரோ இறைவனுடன் மிண்டுவதுபோலத் தன் பிழைகளைக் கூறுவதைச்
சில பதிகப் பாசுரங்களிலே காணலாம்.

“உற்றபோதல் லால்உறுதியை உணரேன் உள்ளமே அமையுமென் றிருந்தேன்
செற்றவர்புர மூன்றெரியெழச் செற்ற செஞ்சடை நஞ்சடை கண்டர்
அற்றவர்க் கருள்செய் பாச்சிலாச் சிராமத்து அடிகள்தா மியாதுசொன்னாலும்
பெற்றபோ துகந்து பெறாவிடில் இகழில் இவரலாதில்லையோ பிரானார்” (14:3)

என்னும் பாடல் எடுத்துக்காட்டாக அமைகின்றது.


3. அடியார்க்கு அடியார்

வாழ்வதற்கும் வளர்வதற்கும் கடவுள் பக்தி
மட்டுமன்றி அடியார் பக்தியும் இன்றியமையாத
தாகின்றது. வாழையடி வாழையாக இந்த அடியார்
கூட்டம் வளர்வதுடன் வணக்கத்துக்குரிய
வர்களாகவும் ஆயினர்.

தனித்துவமான அடியாராகத் திகழும் சுந்தரர்
அடியவர்களுக்கு அடியவராகும் கருத்தினை
முன்வைத்தமை அவருடைய இன்னொரு
தனித்துவப் பண்பினைக் காட்டுகின்றது.

நேரடியாக இறைவனுடன் தொடர்புகொண்ட
சுந்தரர் ஏனைய மக்களுக்கெல்லாம் இவ்வாய்ப்பு
ஏற்படமுடியாது, ஓர் அடியாரூடாகவே அவர்கள்
இறைதொடர்பினை ஏற்படுத்தமுடியும் என்பதை
உணர்ந்தே அக்கருத்தினை அடிப்படையாகக் கொண்ட திருத்தொண்டத்தொகையினைப் பாடினார்.

இதுவே நம்பியாண்டார்நம்பியின் திருவந்தாதியாகி
சேக்கிழாருடைய பெரியபுராணமாக விரிந்தது.
திருத்தொண்டத்தொகை பெயரினால் சுட்டப்பட்ட
அடியார்களையும் தொகை அடியார்களையும் பாடுகின்றது.
திருவாரூர்த் திருக்கோயிலிலே இது பாடப்பட்டது.
பொதுவாக அடியார்க்கு அடியாராகும் நிலை பற்றிச்
சுந்தரர் திருவானைக்காப் பதிகத்திலும் குறிப்பிடுகிறார்.

“மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களும் எல்லாம்
துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே”
என்னும் பாசுரத்தைப் பார்க்கலாம். இங்கு இறையடியார்
எல்லோருமே தொழத்தக்கவராகச் சுந்தரரால்
கருதப்படுகின்றனர்.
கடவுள் வணக்கம் அடியார் வணக்கம் என்பவற்றுள்
அடியார் வணக்கம் சமயத்தை வளர்ப்பதற்குப் பெரிதும்
துணைசெய்ய வல்லது. உலகச் சமயங்களாகிய
கிறிஸ்தவம், இஸ்லாம், ஆகியவற்றில் காலத்துக்குக்
காலம் புனிதர்கள் தோன்றி அச்சமயங்களின்
வளர்ச்சிக்கு உழைத்துள்ளனர்.

சைவசமய வளர்ச்சிக்கு அடியார்களுடைய தொண்டு
மிக இன்றியமையாதது என்பதைச் சுந்தரர் நன்கு
உணர்ந்துகொண்டார். குரு;ப+சை என இன்று நாம்
மேற்கொள்ளும் செயற்பாடு பிள்ளைகளுக்கும்
இளைஞர்க்கும் நம்முடைய சமய குரவர்களை
அறிமுகப்படுத்தவும் நம்முடைய சமயத்தை
உணர்ந்து கொள்ளவும் உதவுகிறது.

இவ்விடத்தில் சுந்தரர் அடியவர்கள் யார் என்று
இனங்கண்டுள்ளமை பற்றிக் குறிப்பிடவேண்டும்.
தனக்கு முன் வாழ்ந்த அடியார்களைப் பெயரிட்டு
நிரைப்படுத்தக் கூறும் அவர்,

“பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே” (39:10)

என்று கூறுவதையும் காண்கிறோம்.
இங்கு சிவசமயத்தைச் சார்ந்தவர் யாவருக்கும்
தான் அடியவன் என்று கூறுவதனூடாக
சிவசமயத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு இவர்கள்
யாவரும் அவசியமானவர்கள் என்பதை
உணர்த்துகிறார். வெறுமனே உயர் அடியார்களையும்
அந்தணர்களையும் கொண்டிருப்பதால் சமயம்
ஒருபோதும் வளரமுடியாது. அவர்களால்
வழிப்படுத்தப்படும் மக்கள் தாங்களும் சிவசமய
அடியார்கள் என்று உணர்ந்து செயற்படும் போதே
அச்சமயம் வீறுநடையிட்டு வளர்ந்து செல்லும்.

4. வழிபடுவோர் நிலை

இயல்புநிலை வழிபடுவோர் பற்றிச் சுந்தரர்
தன்னுடைய பாசுரங்களிலே விரிவாகப்
பாடியுள்ளார். இவ்வழிபடுவோர் இறைவனை
வணங்குவதாலே எத்தகைய நன்மைகளைப்
பெறுகின்றார்கள் என்பதைப் பின்வரும்
பாசுரங்களிலே குறிப்படுகிறார்:-

“மழுவாள்வலன் ஏந்தீமறை ஓதீமங்கை பங்கா
தொழுவார்அவர் துயர்ஆயின தீர்த்தல்உன தொழிலே” (1:10)

“இழைக்கும் எழுத்துக்குயிரே ஒத்தியால்
இலையே ஒத்தியால் உன்னையே ஒத்தியால்
குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால் அடியார்
தமக்கோர் குடியே ஒத்தியால்” (4:4)

“நறுமலர்ப் பூவும் நீரும் நாடொறும் வணங்கு வார்க்கு

அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனை அஞ்சி னேனே” (8:3)

“எண்ணி இருந்தும் கிடந்தும் நடந்தும்
அண்ணல் எனா நினைவார் வினைதீர்ப்பார்” (11:2)

“பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்” (29:4)


“காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய்
கறைக்கண்டா” (41:5)


“சிந்தித் தென்றும் நினைந் தெழுவார்கள்

சிந்தையில் திகழுஞ் சிவன்றன்னை” (61:8)

“மிகச்சிறந் துருகிப் பரசுவார் வினைப்பற் றறுப்பானை” (68:2)

இறைவனை வழிபடுவோர் அடையும் துன்பம்
துயரம் ஆகியவற்றைக் கூறி, இறைவனுடைய
கவனத்துக்கு அவற்றைக் கொண்டுவர
முயல்கின்றார்.

இவ்வாறு பாடும் போக்கு சுந்தரரிடம் மட்டுமே
காணக்கூடியதாயுள்ளது. பின்வரும் எடுத்துக்
காட்டுகளைத் தருகிறோம்:

“பங்கம்பல பேசிடப் பாடும்தொண் டர்தமை
பற்றிக்கொண் டாண்டு விடவுங் கில்லீர்” (2:7)

திருஓணகாந்தன்தளியிலே வீற்றிருக்கும் இறைவன்
மீது சுந்தரர் பாடிய பதிகப் பாசுரங்கள் இறைவன்
வழிபடுவோர்களை நன்கு புரக்கவில்லை என்று
குற்றம் கூறுவதாக அமைகின்றன. சிவனுடைய
தோழன் என்ற முறையில் சுந்தரரால்
இவ்வாறெல்லாம் பாடக்கூடியதாயுள்ளது.
சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:

“நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் ப+சனை
செய்ய லுற்றார் கையில் ஒன்றும் காணம் இல்லை
கழலடி தொழுது உய்யி னல்லால்” (5:1)

வழிபடுவோருடைய அல்லல்களைக் கூறினாலும்
இறைவன் வாளாதிருப்பதாக,

“மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர் வாழ்ந்து போதீரே” (95:1)

என்னும் பாசுரத்திலே குறிப்பிடுகிறார்.
அடியாருடைய தொழுகை பற்றிப் பல
இடங்களிலே சுந்தரர் குறிப்பிடுகிறார்.
திருக்கழுக்குன்றப் பதிகத்திலே (81),

“சென்று சென்று தொழுமின் தேவர்பிரானிடம்” (81:1)
“இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே” (81:2)
“நீளநின்று தொழுமின் நித்தலும்” (81:3)

“வெளிறுதீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை” (81:4)
“புலைகள் தீரத் தொழுமின்” (81:5)

என்று ஏன் தொழவேண்டும் எவ்வாறு
தொழவேண்டும் என்பனவற்றைக் கூறுகிறார்.
திருக்கலயநல்லூர்ப் பதிகத்தில், காலையிலும்
மாலையிலும் கடவுளடி பணிந்து கசிந்தமனத்
தவர்பயிலும் கலயநல்லூர் காணே” (16:8)என்று
காலையிலும் மாலையிலும் தொழும் அடியார்
களைக் காட்டகிறார். திருப்பழமண்ணிப் படிக்கரைத்
திருப்பதிகத்தில் வழிபடுவோர் தொழும் முறைகள்
பற்றிக் கூறுகின்றார்:

“அண்டக பாலஞ்சென்னி அடிமேலலர் இட்டுநல்ல
தொண்டங் கடிபரவித் தொழுதேத்தி நின்றாடுமிடம்” (22:2)

இப்பதிகத்தின் 3ஆவது பாடலில்

“ஆடுமின்; அன்புடையீர்”, “சூடுமின் தொண்டருள்ளீர்”,
“பாடுமின் பத்தருள்ளீர்” என்றும் 5ஆவது பாடலில்
“உங்கைகளாற் கூப்பி உகந்தேத்தித் தொழுமின்”
என்றும் வழிபடுவோர் தொழும் முறைகளைக் கூறுகின்றார்.

5. முடிவுரை: -

சுந்தரர் ஒரு தனித்துவமான ஓர் அடியார்
என்பதனைச் சில சான்றுகளுடன் காட்டியுள்ளோம்.
சுந்தரர் இறைவனைத் தோழனாகக் கொண்டவர்.
தன்னுடைய உள்ளத்து உணர்வுகளையெல்லாம்
நண்பனிடம் கூறுவதுபோல இறைவனிடங்
கூறிவிடுவார். சம்பந்தரோ அப்பரோ இறைவனை
ஏசியதாக, சவால் விட்டதாக இல்லை.

ஆனால் சுந்தரர்க்கு அந்த உரிமையெல்லாம்
இருந்தது. அவர் ‘அடியார்க்கடியாராகும்’
நிலையினைத் தன்னுடைய திருத்தொண்டத்
தொகையூடாகவும் ஏனைய பாசுரங்கபாட்டாகவும்
வெளிப்படுத்துகிறார். இது நம்முடைய சமய
வளர்ச்சி வரலாற்றிலே முக்கியமான ஒரு
கோட்பாட்டினை முன்வைப்பதாயுள்ளது.

இறைவனை வழிபடுவதாலே நம்முடைய -
ஒவ்வொருவருடைய- ஆன்மீக வாழ்வு தூய்மையும் செழுமையுமுடையதாகும்.

இறை அடியார்களை வழிபடுவதாலே
நம்முடைய சமயம் பாரெல்லாம் பரவிச்
செல்வதற்கு வழிவகுக்கும். இறை
வழிபாட்டினையும் அடியார் வழிபாட்டினையும்
நன்கு சமநிலைப்படுத்திச் சுந்தரர் தம்முடைய
பாசுரங்களிலே கூறியிருப்பதை நோக்குமிடத்து
செம்மொழித் தமிழிலே உலக சமயங்களுடன்
ஒப்பிட்டு நோக்கும் வகையில் ஒரு சமய தத்துவம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் கண்டு மகிழ்வும்
பெருமையும் அடைகிறோம். நாயன்மார்களுள்
சுந்தரமூர்த்தி சுவாமிகளே பெருந்தொகையான
பாசுரங்களைத் தன்மை ஒருமை நிலையிலே
பாடுகிறார்.

அவ்வாறு தன்மை ஒருமை நிலையிலே
பாடும்போது இறைவன் அவருடன்கூட இருப்பதாகவும்
அவருடன் அவர் பேசுவதாகவும் ஏசுவதாகவும்
நகையாடுவதாகவும் அவர் பாடல்களிலிருந்து அறிகிறோம்.

சுந்தரருடைய உணர்வுகளையும் எண்ணங்களையும்
புலப்படுத்த செம்மொழித் தமிழ் நன்கு பயன்படுகின்றது. பாம்பாட்டுவதற்குக்கூடச் செந்தமிழ் பயின்றிருக்க
வேண்டும் என்ற பொருளிலே திருப்பைஞ்ஞீலித்
திருப்பதிகத்தில்
“செந்தமிழ்த்திறம் வல்லிரோசெங்கண் அரவ முன்கையிலாடவே” என்று
சுந்தரர் செந்தமிழின் சிறப்பினை எடுத்துக்காட்டுவதை
நோக்கலாம்.



உசாத்துணை: -

இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சுந்தரருடைய தேவார மேற்கோள்கள் யாவும் ஸ்ரீ காசி மடத்து வெளியீடாக 1949இல் வெளிவந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரம் என்னும் நூலிலிருந்து பெறப்பட்டன.
சந்தானலநு;மி, சமயம் வளர்த்த சான்றோர் (சுந்தரர்), பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1990.
சுந்தரமூரத்தி, கு., சுந்தரர் வரலாற்றாராய்ச்சியும் தேவாரத் திறனாய்வும், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1978.



Dorai Rangaswamy, M.A., The Religion and Philosophy of Tevaram
(Book I, Vol. I & II), University of Madras, Madras, 1958.

………………………….. The Religion and Philosophy of Tevaram
(Book II, Vol. III & IV), University of Madras, Madras, 1959.